சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்! பிரதமர் மகிந்த விடுத்துள்ள உத்தரவு

Report Print Murali Murali in அரசியல்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, பாதுகாப்புக் கருதி அண்மையில் தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

நிஷாந்த டி சில்வா, கடந்த காலத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் ஹெக்னேலிகொட காணாமல் போனமை, 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்தமை, வசீம் தாஜூடீன் கொலை உட்பட பல முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகளில் ஒருவராவார்.

நிஷாந்த டி சில்வா, தப்பிச்சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த சுவிஸ் தூதரக பெண் பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக சுவிட்ஸர்லாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு சுவிஸ் அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த பின்னணியிலேயே, சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.