மாவீரர் நாளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி!

Report Print Navoj in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தியொன்றினைத் தெரிவித்தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்குச் செய்தியொன்றைத் தெரிவித்துள்ளார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின அனுஸ்டிப்பின் போது மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி பிரகடனப்படுத்துவதே சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு உரிய ஒரே நேரிய வழி என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவிப் பிரமானத்தை அநுராதபுரத்தில் மேற்கொண்டார். இங்குதான் தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றி கொண்ட சிங்கள மன்னன் துட்டகைமுனுவின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்தப் பதவியேற்பு ஓசைப்படாமலேயே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பிரகடனப்படுத்தும் ஒன்றாகவே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

ஜனாதிபதி தான் சிங்கள பௌத்தர்களாலேயே தெரிவு செய்யப்பட்டதாகவும் அங்கு பிரகடனப் படுத்தினார். இவ்வாறு அவர் பிரகடனப் படுத்துவதற்கு காரணமாய் அமைந்த விடயம் வடக்குகிழக்கில் அவர் பெற்ற அதிகுறைந்த வாக்குகளே. இதைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் பலர் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பாதுகாப்பை வலுப்படுத்தக் குறிப்பாக வடக்குகிழக்கு மாவட்டங்களுக்கு இராணுவத்தினரை அனுப்பும் அரசுகள் வெளியிடப்பட்டது.

இவ்விடத்தில் தமிழ் வேட்பாளர் போட்டியிட்டது மற்றும் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்காதிருக்குமாறும், விரும்பியவர்களுக்கு வாக்களிக்குமாறும் சொன்ன விடயங்கள் என்பன இல்லாதிருந்தால் இன்னும் குறைந்த வாக்குகளை மொட்டுக்கு வழங்கியிருக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தி வடக்குகிழக்குத் தமிழர் தொடர்பில் இன்னும் அதிக அக்கறையைச் செலுத்த வேண்டும் என்ற செய்தியை

ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்திருக்கலாம் என்னும் விடயத்தை இவ்விடயங்களில் சம்மந்தப்பட்டவர்கள் உளங்கொள்வதும் பொருத்தமானது.

தொடர்ந்து, மாவீரர் நாள் கடந்த வருடங்களில் அனுஸ்டிக்கப்பட்டதைப் போல் அனுஸ்டிக்கப்பட முடியாது என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாளுக்கு முற்றான தடை கூட விதிக்கப்பட்டது. இந்தப் பின்னணிகளிலே மாவீரர் நாள் வடக்கு கிழக்கு எங்கனும் முன்னெப்போதும் இல்லாத வகையிலே அதிகளவான மக்களின் பங்குபற்றுதலோடு உணர்வு பூர்வமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தேர்தலை உடனடுத்து ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்கள் செய்தியொன்றைச் சொல்லியுள்ளதாக நாம் தெரிவித்திருந்தோம். இதே போன்ற மற்றுமொரு செய்தியே மாவீரர் நாளில் மேற்குறித்த வெளிப்பாடாகும். இது பொருளாதார அபிவிருத்தியினால் தமிழ் மக்களின் வேணவாக்கள் (அபிலாசைகள்) திருப்திசெய்யப்பட முடியாதவை என்பதன் வெளிப்பாடேயாகும்.

வடக்குகிழக்கு மக்களின் முதலாவது தெரிவு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது மீண்டும் ஒருமுறை இச்செயற்பாடுகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி இந்த நடப்பியலை (யதார்த்தம்) மனம்கொண்டு அரசியற்தீர்வுக்கு முதன்மையளிக்கும் அதேவேளையில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட பிராந்தியங்கள் என்ற வகையிலே வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற செய்தியே இவற்றின் வெளிப்பாடாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தமது இறைமை சார்ந்த இவ்விடயத்தின் இயற்கை நீதித் தன்மையினை ஜனாதிபதியும் அவரின் ஆலோசகர்களும் உள்வாங்கிக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

எனவே தமிழ் மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் தற்போதைய பாராளுமன்றம் உருவாக்கி வைத்துள்ள அரசியலமைப்பை முழுமையாக்கி நிறைவேற்றி பிரகடனப்படுத்தும் செயற்பாட்டில் புதிய அரசை ஜனாதிபதி அவர்கள் வழிநடத்துவது அவர் எதிர்பார்க்கும் சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கான இலகுவானதும், நேரியதானதுமான பாதையுமாய் அமையும் என்றார்.