மகிந்த ராஜபக்ச என்கிற பெயருக்கு பங்கம் ஏற்படுத்த கடந்த அரசாங்கம் செய்த நடவடிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

அரசாங்கம் என்ற வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனம் திரும்பியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இடைக்கால அமைச்சரவையில், ஏற்றுமதி தொழிற்துறை, முதலீட்டு அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க நேற்று முன்தினம் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை அமைச்சில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தினார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“எதிர்வரும் வாரத்தில் பேச்சு நடத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் முடிவுறுத்தி மக்களுக்கு சேவை வழங்கவும் அதேபோல ஆரம்பிக்க வேண்டிய திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை, பாரிய நிதி செலவுசெய்து நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை கடந்த அரசாங்கம் நெற்களஞ்சியசாலையாக மாற்றியதனால் மக்கள் பணமே வீண்விரயமாகியது.

அந்த விமான நிலையத்தை அதன் பின்னர் திருத்துவதற்கும் பாரிய நிதி செலவாகியது. நாட்டினுள் பல களஞ்சியசாலைகள் இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச என்கிற பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதற்காக கடந்த அரசாங்கம் இதனை செய்தது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் அதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

இருப்பினும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் நாங்கள் மிளகாய்களை களஞ்சியப்படுத்த எதிர்பார்க்கவில்லை.

விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து அதற்குச் சமனாக மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம்” என கூறியுள்ளார்.