ஐக்கிய தேசியக் கட்சியிடம், அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை விட்டுக்கொடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியே தட்டிக்கழித்துவருவதாக இடைக்கால அமைச்சரவையின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

இராஜாங்க போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட திலும் அமுனுகம இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தில் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சவால்களை பொதுஜன முன்னணி எப்படியேனும் சமாளித்துக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

எம்முடன் இணைய வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவர்களை உள்ளீர்ப்பதா என்பதுதான் பிரச்சினை. அந்த வளர்ச்சியானது இந்த நாட்டிற்கு உகந்ததா என்பது இந்த நாட்டின் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த அரசாங்கத்திற்கு அவசியமான தருணத்தில் ஆனந்த அளுத்கமகே, நிரோஷன் பெரேரா போன்றவர்கள் எம்முடன் இணைந்தமை பலமாக உள்ளது.

நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வரப்பிரசாரங்களை அளித்து உள்ளீர்த்தால் அது பழைய முறைக்கே திரும்பவதாகிவிடும்.

இந்த நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றமானது நடக்காமலேயே போய்விடும் என்பதால் இடைக்கால அரசாங்கமாக இந்த காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராகி வருகின்றோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தந்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான ஆணையை தரும்படி கோரினோம். ஆட்சியிலிருக்க வேண்டியது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஆனாலும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. அந்தக் கட்சிக்கு சரியான பதிலை மக்கள் கடந்த தேர்தலில் வழங்கினார்கள். அவர்களுடைய ஆட்சிமுறை தவறானது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேர்தலுக்கு செல்ல விருப்பமில்லை என்றால், அதற்கான இடத்தை எமக்கு ஒதுக்கிக்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஐக்கிய தேசியக்கட்சிக்கு முன்வைக்கின்றோம்” என கூறியுள்ளார்.