டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Report Print Malar in அரசியல்

புதிய இணைப்பு

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குடியரசு மாளிகையில் வழங்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்புக்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காகவும் இந்தியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நான் அதிபராக இருக்கும் காலத்தில் இந்திய - இலங்கை உறவை மிகச் சிறந்த நிலையில் பராமரிக்க விரும்புகிறேன்.

வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியா - இலங்கை இடையே நீண்ட கால உறவு உள்ளது. இரு நாடுகளும் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இதையடுத்து, நரேந்திர மோடிக்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில், கோட்டாபய ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வுகள் தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டபாய ராஜபக்ச ராஜ் காட் பகுதியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவுத்தூபிக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முதலவாது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.