பொதுத் தேர்தல் வரையே அரசாங்கத்தின் மாயா ஜாலங்கள் - முன்னிலை சோசலிசக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் நாளாந்த மகிழ்விப்புகளுக்கு ஏமாறாது யாதார்த்தத்தை புரிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அளவுக்கு கடந்த சில தினங்களில் நாட்டில் ஏற்பட்ட அவசரமான நிலைமை என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகிறது, இதனால், சிங்கள வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்குமாறு கோட்டாபய ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவினர் தேர்தலின் போது கூறினர்.

நாங்கள் இந்த நிலைமையை தெளிவுப்படுத்தினோம். ஐக்கிய தேசியக் கட்சி கோட்டாபாய ராஜபக்சவை காட்டி பயமுறுத்தி வாக்கு கேட்கும். பொதுஜன பெரமுன சஹ்ரானை காட்டி பயமுறுதி வாக்கு கேட்கும் என்பதை நாங்கள் தெளிவுப்படுத்தியிருந்தோம்.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் பிக்குமாரே என்னை ஆசிர்வதித்தனர், சிங்கள மக்களே எனக்கு வாக்களித்தனர், தமிழ், முஸ்லிம் மக்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என கோட்டாபய ராஜபக்ச கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை செல்ல எதிர்பார்த்துள்ள பயணத்தையே அவர் காண்பித்தார். அத்துடன் அவரது கருத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தும் தொனியும் காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கத்தின் முதலாவது வர்த்தமானியை வெளியிட்டு, இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கி, பொது பாதுகாப்பு சட்டத்தின் 12 ஷரத்தை அமுல்படுத்தினர்.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்கே இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும். குறிப்பிட்ட பிரதேசத்திற்கு இதனை வழங்க முடியும். அதற்கு அந்த பிரதேசத்தில் அவசரமான நிலைமை ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும். கடந்த சில தினங்களில் அப்படியான என்ன அவசரமான நிலைமை ஏற்பட்டது.

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் என்ன தவறு என்று சிலர் கேட்கின்றனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இராணுவத்தில் கடமையாற்றி தந்தை ஒருவர் காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் தனது பிள்ளைகளை அழைத்துச் செல்ல சென்றிருந்த போது இராணுவ அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய நேரிட்டது. அப்போது இராணுவ சிப்பாய் ஒருவரை அவரை சுட்டுக்கொன்றார்.

இந்த சம்பவத்தில் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்றால் முட்டுக்காலுக்கு கீழ் நடத்துமாறு சிலர் கூறினர். அப்போது கருத்து வெளியிட்ட இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர், பொலிஸாருக்கே முட்டுக்காலுக்கு கீழ் சுடும் அதிகாரம் இருப்பதாகவும் இராணுவத்தினருக்கு அப்படி சட்டத்திட்டம் இல்லை எனக் கூறினார்.

அரசுக்கும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்படும் மோதல்களில் தலையிடவே பொலிஸ் இருக்கின்றது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல்களின் போது தலையிடவே இராணுவம் இருக்கின்றது.

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியதன் மூலம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அனுபவங்கள் வடக்கு மக்களுக்கு மட்டுமல்ல தென் பகுதி மக்களுக்கு இருக்கின்றது. இந்த சட்டத்தின் கீழேயே இராணுவத்தினர் ரத்துபஸ்வலவில் துப்பாக்கச் சூடு நடத்தினர். கட்டுநாயக்கவில் ரொஷான் சானக்கவை கொன்றனர்.

ஏன் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது?. எதிர்வரும் மார்ச் மாதம் செலுத்த வேண்டிய கடன் தவணையை செலுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதனால் வயிற்றில் ஈர துணியை கட்டிக்கொள்ளுமாறும் அவர் மக்களுக்கு கூறினார்.

அரசாங்கம் காட்டும் மாயா ஜாலங்களில் இந்த பிரச்சினைக்கு பதில் கிடையாது. அடுத்த பொதுத் தேர்தல் வரை அரசாங்கம் இந்த மாயாஜாலங்கள் காண்பிக்கும். இப்படியான மாயா ஜாலங்களை நாங்கள் ரணில் - மைத்திரியின் 100 நாள் அரசாங்கத்திலும் பார்த்தோம் எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.