ஜனாதிபதி கோட்டாபயவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள உறுதிமொழிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையில் இன்று நடைபெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி இரண்டு தரப்புக்கும் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒத்துழைப்புடன் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை பொருளாதார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக இந்தியாவின் தலையீட்டை வரவேற்பதாக கூறியுள்ளார். குறிப்பாக இரண்டு நாடுகளின் மீனவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டறிக்கையில் இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

தொடர்ந்தும்,

இலங்கை வாழ் மக்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இருந்தாலும் மனங்களில் காணப்படும் கசப்பை கைவிட்டு ஒருமைப்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். நான் அதனை உறுதியாக நம்புகின்றேன்.

சிறு சிறு பிரச்சினைகளை பெரிதாக்கி அது பயங்கரவாதமாக உருவெடுக்குமாயின் அதனை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. நாம் எப்போதும் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை பிரச்சினைகளின்போது இந்தியா அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்தது.

முக்கியமாக பயங்கரவாதத்தை இல்லாதொழித்த சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது.

இலங்கையிலோ இந்தியாவிலோ இனி வரும் காலங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் இலங்கையை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின்போதும் எம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் நாம் இலங்கைக்கு துணையாக இருக்கின்றோம்.

அந்த நேரம் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதேபோல நான் நம்புகின்றேன், தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவும் தமிழ் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கடமையாற்றுவார் என்று.

தமிழ் மக்களுக்கான நியாயத்தையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பெற்றுக் கொடுப்பது முக்கிய கடமையாகும். அவர்களுக்கு அந்த நாட்டில் சம அளவில் அனைத்தும் கிடைக்கப்பெற வேண்டும்.

இதில் முக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம் 13ஆம் திருத்தச் சட்டமாகும் . 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தினால்தான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். வடக்கில் மாத்திரம் அல்ல முழு நாட்டிலும் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்தியா இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். இன்று நாங்கள் இரு நாட்டின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்காக இந்தியா 50 மில்லியன் டொலரை இலங்கைக்குக் கடனாக வழங்கவுள்ளது.

மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 400 மில்லியன் டொலரை கடனாக இந்தியா வழங்கவுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 46 ஆயிரம் வீடுகளைக் கட்டியுள்ளோம். மேலும் 14 ஆயிரம் வீடுகள் அங்குள்ள மக்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் கடன் இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்படும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இந்திய வம்சாவழித் தமிழர் பகுதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு போன்றவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.