நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம்! நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

பாதுகாப்பு விடயம் குறித்து இந்தியா, இலங்கை மீது நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தமை தொடர்பில் நான் பெருமிதம் அடைகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய இன்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தோம். இதன்போது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து என்னிடம் பேசியிருந்தார்.

அந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

யுத்த நடவடிக்கைகளின்போது இந்தியா எம்மோடு ஒத்துழைத்து எமக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

இந்த விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நாம் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். அதே போல நன்றி கடன்பட்டுள்ளோம். எமது புலனாய்வு துறைய மேம்படுத்துவதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந்துள்ளது.

இந்து சமுத்திரம்தான் எமது சமாதானத்தின் அடையாளம். எந்த நாட்டில் சமாதானம் பாதிக்கப்பட்டாலும் அங்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்து முன்னிலையாகி பணியாற்றுகின்றது. அதேபோல எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் இந்தியா பாரிய பங்காற்றுகின்றது.

இலங்கை தொடர்பாக இந்தியா வைத்திருக்கும் நம்பிக்கை அதேபோல எமது அரசாங்கம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் நான் இந்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய - இலங்கை உறவை உயர்மட்டத்துக் கொண்டு செல்ல எனது பதவிக்காலத்தில்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.