மோடி முன்னிலையில் கோட்டாபய வழங்கிய வாக்குறுதி!

Report Print Rakesh in அரசியல்

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பேன். அத்துடன், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இன்று (29) நண்பகல் ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்ற இரு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற இணை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் நாம் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். மேலும், இரு நாடுகளினதும் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.

இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தினோம். நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பேன் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன், குறித்த மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்.

இந்தியாவுக்கான அரச முறை பயணத்தை மேற்கொள்ளுமாறு எனக்கு வழங்கப்பட்ட அழைப்புக்கு இந்தியப் பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியப் பிரதமரையும் இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றேன்" - என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹைதராபாத் மாளிகையிலுள்ள விசேட அதிதிகளின் குறிப்பேட்டிலும் நினைவுக் குறிப்பொன்றைப் பதிவு செய்தார்.