ரிசாட், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! சத்தாதிஸ்ஸ தேரர் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவே வழிநடத்தியதாக ராவணா பலய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ரிசாட் பதியூதீன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

புதிய இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜயந்த சமரவீர இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு ஆசி வழங்குவதற்காக பௌத்த தலைமை பிக்குகள் அழைக்கப்பட்டிருந்ததோடு இதில் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று நாட்டிலிருந்து பலர் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள். அண்மையில் நிஷாந்த டி சில்வா என்ற அதிகாரி தப்பிச்சென்றார். அதன் பின்னர் ஷாணி அபேசேகர உள்ளிட்ட திருடர்கள் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள்.

சிறிகொத்தவில் நடத்திய ஊடக சந்திப்பில் இதுபற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று கூறியிருக்கின்றார். அவர்கள் சொன்னதைத்தான் அந்த அதிகாரிகள் செய்தார்கள்.

சிறிகொத்தவே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பாதுகாத்தது. இவ்வாறு தப்பிச் செல்லாத ரிசாட் பதியுதீன் மற்றும் ஹக்கீம் போன்றவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு மிகவிரைவில் பதிலளிக்கவேண்டும்.

மக்கள் இவற்றையே எதிர்பார்க்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே திரிகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.