கூட்ட‌மைப்பின் நிலைப்பாடு மிகவும் தாம‌த‌மான‌ ஞான‌மாகும்! உல‌மா க‌ட்சி

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

13வது திருத்தத்திற்கு அப்பாலும் சென்று தீர்வைத்த தர இருப்பதாக முன்னைய காலங்களில் ராஜபக்ச ஆட்சியின்போது குறிப்பிடப்பட்டது போல் அந்த‌ வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென நாம் விரும்புகிறோம்” என்று த‌மிழ் கூட்ட‌மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்லியிருப்ப‌து, தொழில் செய்ய‌ மாட்டோம் ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டும் த‌ர‌ வேண்டும் என‌ சொல்லும் நிலையாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இல‌ங்கையின் பிர‌ச்சினைக்கு 13ஐ அமுலாக்க‌ வேண்டும் என்ற‌ இந்திய‌ பிர‌த‌ம‌ர் மோடி, ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌வுட‌னான‌ ச‌ந்திப்பின் போது சொன்ன‌தை த‌மிழ் கூட்ட‌மைப்பு வ‌ர‌வேற்றிருப்ப‌து மிக‌வும் தாம‌த‌மான‌ ஞான‌மாகும்.

1987ம் ஆண்டு இல‌ங்கை இந்திய‌ ஒப்ப‌ந்த‌த்தை புலிக‌ள் ஏற்றிருந்தால் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளும், முஸ்லிம்க‌ளும் அழிந்திருக்க‌ மாட்டார்க‌ள். புலிக‌ளின் ஊது குழ‌லாக‌ இருந்த‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு இத‌னை புலிக‌ளுக்கு வ‌லியுறுத்தியிருந்தால் பிர‌பாக‌ர‌ன் கூட‌ இப்போது இருந்திருக்க‌லாம்.

13 பிள‌ஸ் த‌ருவேன் என‌ ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ கூறிய‌துட‌ன் த‌ன‌க்கு தேர்த‌லில் ஆத‌ர‌வ‌ளிக்கும்ப‌டியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனாலும் க‌ட‌ந்த‌ 2015 தேர்த‌லில் ம‌கிந்த‌வை தோற்கடிப்ப‌தில் ப‌ங்காற்றிய‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு, 2019லும் கோட்டாவை எதிர்த்து நின்ற‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு இப்போது 13 பிளஸ்ஸையும் ம‌கிந்த‌ அர‌சு த‌ர‌ வேண்டும் என‌ கேட்ப‌து, என்னிட‌ம் வேலை செய்தால் நான் உன‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் த‌ருவேன் என‌ ஒருவ‌ர் சொன்னால் தொழில் செய்யாம‌ல் இருந்து அவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டு ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டும் கேட்கும் வெட்க‌ங்கெட்ட‌ செய‌லாகும்.

இனி 13 பிளஸ் ப‌ற்றி எந்த‌ப்பேச்சுக்கும் இட‌மில்லை என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும். 13ஐ கொண்டு வ‌ந்த‌ ராஜீவ் காந்தியையும் கொன்று விட்டு 13+ த‌ருவேன் என்ற‌ ம‌கிந்த‌வையும் தோற்க‌டித்து விட்டு இப்போது 13 என்றும் பிள‌ஸ் என்றும் பேச‌ வெட்க‌மில்லையா?

13ம் திருத்த‌த்தில் கூட‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌ற்காலிக‌மாக‌ இணைக்க‌ப்ப‌ட்டு பின்ன‌ர் பிரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தால் மீண்டும் எக்கார‌ண‌ம் கொண்டும் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைவ‌தை உல‌மா க‌ட்சி எதிர்க்கும்.

13வ‌து திருத்த‌த்தின் பிர‌கார‌ம் மாகாண‌ ச‌பைக‌ளுக்கு காணி, பொலிஸ் அதிகார‌ம் வ‌ழ‌ங்குவ‌து பாரிய‌ பிழையாகும். இது இன‌ங்க‌ளுக்கிடையில் மேலும் விரிச‌ல்க‌ளைத்த‌ருமே த‌விர‌ இன‌ப்பிர‌ச்சினைக்கு தீர்வைத்த‌ராது.

100 வீத‌ம் த‌மிழ் பேசுவோர் வாழும் க‌ல்முனையில் முஸ்லிம்க‌ளுட‌ன் இணைந்து பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை கொண்டு செல்ல‌ விரும்பாம‌ல் த‌ம‌க்கென‌ த‌னியான‌ செய‌ல‌க‌ம் கேட்கும் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் எவ்வாறு முஸ்லிம்க‌ளுக்கும் ஏற்ற‌ தீர்வு கிடைக்கும் என்ப‌து சிந்திக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றாகும்.

13வ‌து திருத்த‌ம் என்ப‌து காலாவ‌தியான‌ ஒன்று என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும். சுமார் 32 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னான‌ யாப்பு திருத்த‌த்தை இப்போது ந‌டைமுறைப்ப‌டுத்த‌ கோருவ‌து கால‌ப்பொருத்த‌ம‌ற்ற‌தாகும். இதே 13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌ம் விடுத‌லைப்புலிக‌ளாலும் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ ஒன்றாகும்.

ஆக‌வே இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினைக்கு தீர்வாக‌ முன்வைக்க‌ப்ப‌ட்ட‌ 13வ‌து திருத்த‌த்தை ர‌த்து செய்து மாகாண‌ ச‌பை முறைக‌ளும் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்டு மாவ‌ட்ட‌ ச‌பை முறையை கொண்டு வ‌ர‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ம‌ற்றும் பிர‌தம‌ர் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சு முய‌ற்சி எடுக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை முஸ்லிம் உல‌மா க‌ட்சிக்கு உண்டு என‌” அவர் மேலும் கூறியுள்ளார்.