ஜனாதிபதி மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் - எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்பதால், முதலாம் திகதியே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுப்பார் என காணி மற்றும் காணி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹங்குராங்கெத்தயில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது பிரச்சினையல்ல. விசேட சட்டமூலங்களை நிறைவேற்றும் போது மட்டுமே பெரும்பான்மை பலம் தேவைப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க்கட்சியுடன் பேசி இணக்கத்தை ஏற்படுத்தி நிறைவேற்ற முடியும்.

அப்படியான அதிமுக்கியமான விடயம் சம்பந்தமான யோசனை, சட்டமூலங்கள் இருக்குமாயின் அவற்றை இந்த மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க மாட்டோம்.

ஜனாதிபதிக்கு தேவையேற்பட்டால் நாடாளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியும். அடுத்த இரண்டு மாதங்கள் முடியும் போது தேர்தல் நெருங்கிவிடும். மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு முடியும். ஜனாதிபதி மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.