மூன்று மாதங்கள் தங்கியிருக்க அமெரிக்கா செல்லும் பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தபாகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச மீண்டும் அமெரிக்க புறப்பட்டுச் செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 5ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பசில் ராஜபக்ச அங்கு மூன்று மாதம் தங்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்று அவரது தலைமையின் கீழ் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற பின்னணியில் பசில் ராஜபக்ச மூன்று மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க உள்ளார்.

தேர்தல் நடக்க உள்ள பின்னணியில் பசில் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருக்கப் போவது பொதுஜன பெரமுனவின் பலருக்கு பிரச்சினையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முன்னர் அவரை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமித்து அவருக்கான அலுவலகத்தை திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் பசில் ராஜபக்ச தற்போது மிகவும் அமைதியாக இருந்து வருவதை காண முடிகிறது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் கூட பசில் ராஜபக்சவை காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.