பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் - தகவல்களை வழங்கியது சுவிஸ் தூதரகம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் உள்ள சில தகவல்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு உதவியாக மேலும் இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கையின் இணையத்தளம் ஒன்றை மேற்கோள்காட்டி சுவிஸ் இன்போ என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தூதரகத்தின் தகவல்களை வெளியிடுமாறு அடையாளம் தெரியாத நபர்கள் பெண் அதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுவிஸர்லாந்து அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில் குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தி சுவிஸர்லாந்து தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக சுவிஸ் தூதரகம் சட்டரீதியான முறைப்பாட்டை செய்துள்ளதுடன் விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு முழுமையான உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

பெண் அதிகாரியின் உடல் நிலை மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஊழியர் சுகவீனமான நிலைமையில் இருப்பதால், வாக்குமூலம் வழங்குவதற்கான நிலையில் அவர் இருக்கவில்லை.

அத்துடன் இலங்கை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் சேவையாற்றி ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரை நாடு கடத்துமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்கை சுவிஸர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அப்படியான கோரிக்கை தமக்கு விடுக்கப்படவில்லை என சுவிஸர்லாந்து தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இது சம்பந்தமாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் இலங்கையின் ராஜதந்திர வரலாற்றில் கரும்புள்ளி எனக் கூறியுள்ளார். இது இலங்கையை சர்வதேச ரீதியில் மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்