விடுதலைப் புலிகளின் தலைவர் எடுத்த நடவடிக்கையை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது! ஹரிஸ்

Report Print Varunan in அரசியல்

வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும்.

குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் சஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதலையும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களையே கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார்.

சஹ்ரான் குழுவினரின் அடுத்த இலக்கு தமிழ் நாடு என்றும் கருத்துக்களை முன்வைத்தனர். மோடி பிரதமரானதும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தார், குறிப்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட வேண்டும் என்றும் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற நிலை இலங்கையிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

காஸ்மீர் இன்று லடக் என்றும் ஜம்மு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது, இதைப்போன்றுதான் கோடீஸ்வரனும், மாநகரசபை உறுப்பினர் ராஜன் போன்றோர் கல்முனையை கூறு போட துடிக்கின்றனர்.

இலங்கையின் நில அமைப்பில் கிழக்கு மாகாணத்தின் அமைப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களின் வர்தகம், கல்வி, கலாச்சாரம், அரசியல் என்பவற்றின் இருப்பை கேள்விக்குறியாக்கி இல்லாமல் ஆக்குவதற்கு வல்லரசான இந்தியா முழுமையாக செயற்படுகின்றது.