பொதுத்தேர்தலில் மைத்திரி களமிறங்குவார்! தயாசிறி ஜயசேகர உறுதி

Report Print Ajith Ajith in அரசியல்

அடுத்த பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியொருவர் எவ்வாறு செயற்பட வேண்டும், அவரின் பதவி நிலை என்ன என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. நாட்டு மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். சிலர் விமர்சிக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் அவரை நேசிக்கின்றனர்.

அரசியலில் இருந்து அவர் ஒதுங்கவில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் இந்த மாவட்டத்தில் (பொலன்னறுவையில்) போட்டியிடுவார். அமோக வெற்றி பெற வையுங்கள்." என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,

ஜனாதிபதிக்கான பதவிகாலம் முடிவடைந்த பின்னர், எனது அரசியல் வாழ்க்கையும் முடிவடைந்துவிட்டதாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை, நான் மீண்டும் அரசியலில் அவதாரம் எடுப்பேன். என் உடலில் இறுதி மூச்சு இருக்கும் வரை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அரசியலில் ஈடுபட்டு சேவையாற்றுவேன். இதனை எவராலும் தடுக்க முடியாது." என்றும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.