மக்களுக்கு உதவவே விடுதலைப் புலிகளை வென்றோம்! பாதுகாப்பு செயலர்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.

மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும், அதன்படி, மக்களுக்கு தாம் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியம் என்பதை தாங்கள் அறிந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தையே அகற்ற வேண்டும் என தாங்கள் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

அதைவிடுத்து, ராணுவத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பொதுமக்கள் வாழ்கின்ற பகுதிகளில் ராணுவ முகாம்கள் இருக்கக் கூடாது என கூறிய எம்.ஏ. சுமந்திரன், கடந்த காலங்களில் அந்த நடவடிக்கை சற்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களை மீள்குடியேறவிடாது தடுக்கும் நடவடிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருவதாக சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்ததன் பின்னர், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டுமொரு யுத்த சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடந்த கால அரசாங்கங்கள் தெரிவித்து வந்தன.

இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே வடக்கு பகுதிகளிலுள்ள ராணுவ முகாம்களை அகற்ற போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.

அதனால் சில தரப்பினர் கூறுகின்ற காரணங்களை அடிப்படையாக மாத்திரம் கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது செயற்பட முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.

ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படாது என கூறிய கமல் குணரத்ன, ராணுவ முகாம்களினால் மக்களுக்கு சேவைகளே கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தக் காலத்திலும், அதற்கு பின்னரான காலப் பகுதிகளிலும் வடக்கு பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்துவதற்காக இலங்கை ராணுவம் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியதாக கமல் குணரத்ன கூறினார்.

இன, மத வேறுபாடின்றி, இலங்கை மக்களுக்கு தம்மால் முடிந்தளவு உதவிகளை செய்ய தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருள்களை அழிவடைய செய்ய அரசாங்கம் என்ற வகையில் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருள்கள் அழிக்கப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

தொல்பொருள் பாதுகாப்பு என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

தமிழர்களின் பூர்விக வணக்கத்தலங்கள், தொல்பொருள் என்ற போர்வையில் அழிக்கப்படுவதையும், மாற்றியமைக்கப்படுவதையும் அனுமதிக்க போவதில்லை என சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

எந்த மதத்திற்கு சொந்தமானாலும், எந்த இனத்திற்கு சொந்தமானாலும், அவர்களின் தொல்பொருள்களை பாதுகாப்பதே தமது கடமை என அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கான உதவிகளை வழங்க அரசாங்கத்திற்கு மிக இலகுவாக இருக்கும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமன்றி வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு செயலாளரின் அழைப்பு வரும் வரை தாங்கள் பார்த்துக்கொண்டிருக்காது, இதுவரை காலமும் வடக்கு மக்களுக்கான உதவிகளை செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாண மக்களுக்கும் தாம் சேவையாற்றி வருவதாக சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்க ஜனாதிபதியுடன், தமிழ் அரசியல்வாதிகள் கைக்கோர்த்தால், அந்த நடவடிக்கை மேலும் இலகுவாக முன்னெடுக்கப்படும் என கமல் குணரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.

- BBC - Tamil