தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இரண்டரை கட்சிகளே தற்போது உள்ளது எனவும் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏனமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலையில் இருந்து மதியம் வரை இடம்பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) மத்திய குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது கட்சி மத்திய குழுவினருடனான சந்திப்பு இன்று நடைபெற்றது.

எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்பதை எமது மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தவகையில் மாற்று அணிக்கான வேலைகளை நாங்கள் முன்னின்று செய்ய வேண்டும் என்பதும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமான நிலையில் தற்போது உள்ளது. இரண்டரைக் கட்சிகள் தான் அதில் அங்கத்துவம் வகிக்கின்றது. ஆகவே அவர்களுடைய தவறுகள், தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை அவர்கள் கைவிட்டு செயற்பட்ட விதங்கள், அரசாங்கத்தை பாதுகாப்பே அவர்களது ஒரே நோக்கமாக இருந்த நிலவரங்கள் என்பவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து மாற்று தலைமை ஒன்று அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.

நாங்கள் ஒட்டுமொத்தமான தமிழ் கட்சிகளின் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து இன்று வரை தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்திருக்கின்றோம்.

அதற்காக செயற்பட்டும் இருக்கின்றோம். தமிழ் மக்களது உரித்துக்கள் வெல்லப்படுவதற்கு எல்லோரும் ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு உகந்த தாபனமாக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகின்ற போதும் அதற்கான ஒரு யாப்போ, முடிவு எடுப்பதற்கான ஒரு குழுவோ இல்லை. ஓரிருவர் மாத்திரம் தான் முடிவெடுக்கும் நிலையில் உள்ளனர். தேர்தலுக்காக மட்டும் ஐக்கியம் பற்றி பேசுகின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.

வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள அரசியல் நிலமைகள் என்பவை வித்தியாசப்படுகின்றன. தமிழ் மக்கள் அங்கு சிங்கள, முஸ்லிம் இனங்களால் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் மிக மோசமாக தமிழர் தரப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மாகாண சபையில் ஒரு தமிழ் தலைமைத்துவம் வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது.

ஆகவே அதற்கேற்ற வகையில் தேர்தல் வருகின்ற போது எங்களுடைய வியூகங்கள் அமையும். தமிழர்களுடைய நலன்கள் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து எமது முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிவித்தார்.