கோட்டாபய, மகிந்தவுக்கு ராஜதந்திரப் பாதிப்பை ஏற்படுத்திய விவகாரம்!

Report Print Ajith Ajith in அரசியல்

பதவிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குள் சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விடயம் புதிய அரசாங்கத்துக்கு பாரிய ராஜதந்திர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கருத்துக்கூறியுள்ளது.

இந்தநிலையில் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுக்க பதில் காவல்துறை அதிபர் சந்தன விக்கிரமரட்ன, சிரேஸ்ட காவல்துறை அதிபர் ரவி செனவிரட்ன, குற்றப்புலனாய்வுத்துறைக்கு புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுடன் 12 வருடமாக பணிபுரிந்த சிரேஸ்ட காவல்துறை அதிபர் திலகரட்ன ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கடந்த வாரம் தீவிரமான கலந்தாலோசனைகளை நடத்தினர்.

இந்தநிலையில் சுவிஸ் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் ஜீஎல் பீரிஸையும் சந்தித்து விசாரணைகளின் துரிதம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜேர்மனுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சி நாளை இது தொடர்பில் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

கடத்தி சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளர் தூதரகத்தில் குடிபெயர்வு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பாதுகாப்பு கருதி அவருடைய பெயர் வெளியிடப்படாமல் உள்ளது.

வெள்ளை நிற டொயோட்டா வானில் வந்த ஐந்துபேரே இவரை கடத்தி 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.

கடத்தப்பட்டவேளையில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி நிசாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்சென்றமை தொடர்பில் பெண் அதிகாரி விசாரணை செய்யப்பட்டார்.

எனினும் அவர் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது.

எனினும் இந்த சம்பவமும் பாணந்துறையிலும் வத்தளையிலும் தமிழ் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமையும் அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயல்கள் என்று வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவரத்தன தெரிவித்துள்ளார்.