இந்திய அரசு விரும்புகின்ற தமிழரின் வேணவாவை கோட்டா பூர்த்தி செய்யவேண்டும்! சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அந்த நாட்டு அரசு விரும்புகின்ற - எதிர்பார்க்கின்ற இலங்கைத் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுக்க வேண்டும்.

இந்த அரசாவது இந்திய அரசின் தொடர் கோரிக்கையான அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மதிப்பு ஆகியவை குறித்த வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபா ராஜபக்ச முன்னிலையில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் எமது செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், அதற்கான அரசியல் தீர்வு விடயம் குறித்தும் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. அதாவது சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு வருகின்றது. இதை இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பில் நாம் வரவேற்கின்றோம்; பெரிதும் மதிக்கின்றோம்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் இந்திய அரசு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இந்தக் கோரிக்கையை - வேண்டுகோளை நிறைவேற்றுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசால் இந்திய அரசுக்குப் பல தடவைகள் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசுகளினால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த பல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாவது இந்திய அரசின் தொடர் கோரிக்கையான அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகின்ற - எதிர்பார்க்கின்ற இலங்கைத் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மதிப்பு ஆகியவை குறித்த வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய அரசு முன்னெடுக்க வேண்டும்.

பிளவுபடாத - ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் கோட்டாபய அரசு இறங்கவேண்டும் எனவும், இதற்கு இந்திய அரசு சகலவிதமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் தமிழ் மக்கள் சார்பில் இந்தச் சந்தர்ப்பத்தில் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.