மக்களிடம் ஜேவிபியினர் முன்வைத்துள்ள கோரிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுத் தேர்தலில் எம்மை பிரதான எதிர்க்கட்சியாக மாற்றும் மக்கள் ஆதரவை நாங்கள் கேட்டு நிற்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கவில்லை.

ஆனால் பொதுத் தேர்தலில் எம்மை பிரதான எதிர்கட்சியாக மாற்றும் மக்கள் ஆதரவை கேட்கின்றோம்.

அத்துடன் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிகழும் அதிகார மோகமும் முரண்பாடுகளும் மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.

அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காது குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர்.

ஆகவே அவர்கள் எதிர்கட்சியாக அமர்ந்தாலும் கூட குற்றவாளிகளை காப்பாற்றும் வேலைத்திட்டம் மட்டுமே இடம்பெறும்.

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்து 69 இலட்சம் மக்கள் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

அவர்களுக்காக மட்டும் அல்ல நாட்டில் சகல மக்களுக்காகவும் அவர் தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டும். அவருடன் இருக்கும் இனவாத, அடிப்படைவாத சக்திகள் கூறுவதை கேட்டு இறுக்கமான ஆட்சியை அவர் கொண்டு செல்லாது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.