அலரி மாளிகையில் கிடைக்கப்பெற்ற ஆவணக்கோவை பற்றிய செய்தி உண்மைக்கு புறம்பானது : ஐ.தே.க மறுப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

அலரி மாளிகையில் ஆவணக்கோவை கிடைக்கப்பெற்றதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலக ஊடகப் பிரிவு இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான ஆவணக் கோவையொன்று தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கைகளில் சிக்கியது என ஊடகங்களில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து முன்னாள் பிரதமர் ரணில் கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களை ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் ரணில் தனது ஆட்சிக் காலத்தில் ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியுடன் தொடர்புடைய ஆவணங்களை தயாரிக்கும் பணிகளை பிரதமரின் பணியாளர்கள் மேற்கொண்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கோவைகள் அனைத்தும் கிரமமான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.