எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இணக்கப்பாடு எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ள நிலையில், அந்த கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக யாரை? நியமிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என மற்றுமொரு தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனால் எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இரு முறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

எனினும், இந்த பேச்சுவார்த்தைகளில் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளவில்லை. இதனால், சபாநாயகர் கரு ஜயசூரியவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இணக்கப்பாடு எட்டப்படும் என கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.