சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! பொறுப்புடன் தீர்வுகாணுமாறு கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கமும், சுவிஸ் தூதரகமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வுக்கு வரவேண்டும் என முன்னாள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையில் சட்டங்கள் இருப்பதாகவும், நாட்டின் இறைமையை மீறிச்செயற்பட தூதரகங்களுக்கும் தனிநபர்களுக்கும் இடமளிக்கமுடியாது எனவும் அவல் குறிப்பிட்டார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஒரு நாட்டில் சட்டம் இருக்கின்றது. தூதரகம் என்றாலும் அந்த சட்டங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து பேசப்படும் நபர் இலங்கை பிரஜை என்பதால் இந்த நாட்டின் சட்டங்களுக்கு மதித்து கடமையாற்ற வேண்டும்.

அத்துடன் நாடு இராஜதந்திர ரீதியில் மோதல்களுக்கு செல்லவும் கூடாது. எந்த வகையில் பேச்சு நடத்த வேண்டும் என்கிற முறை இருப்பதால் மோதல்களுக்கு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன இருக்கின்றார். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு நாட்டின் இறைமையை மீறிச்செல்ல முடியாது. அந்த நாடுகளுக்கு நாங்கள் சென்றாலும் அவ்வாறே.

முதலில் நாட்டின் இறைமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதனை மீறிச்செயற்பட இடமளிக்கமுடியாது. தனிநபர்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் சட்டங்களை மீறிச்செயல்படவும் இடமளிக்கமுடியாது.

தனிநபர்களுக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டுமென்றால் நாட்டில் அரசாங்கம் ஒன்று அவசியமில்லைதானே. ஆகவே சட்டகிரமங்களுக்கு இடையே தூதரகத்துடன் பேச்சு நடத்தி தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஊடகங்களும் இந்த விவகாரத்தில் சம்பவத்தை பெரிதாக்கக்கூடாது. எனவே இருதரப்பினரும் பொறுப்புடன் தீர்வுகாண வேண்டியது அவசியமாகும்” என அவர் கூறியுள்ளார்.