கோட்டாபயவின் புதுவரவால் நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு? ஆரம்பமானது அபிவிருத்தி போர்

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச முதன்முறையாக இந்தியாவின் Bharat Shakti.in மற்றும் SNI ஆகிய இணைய ஊடகங்களின் தலைமை ஆசிரியர் நிதின் ஏ கோகலேக்கு ஒரு தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருக்கிறார் என கட்டுரையாளர் கார்வண்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

இந்தச் செவ்வியில் உங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுடன் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுக்கப் போகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கின்ற பதில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ அதன் ஆழ அகலம் பற்றியோ ஆராய்வதற்கு மாத்திரமன்றி அதுபற்றி பேசுவதற்குக் கூட அவர் தயாராக இல்லை என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தமது முதலாவது உரையில் தமிழ், முஸ்லிம் மக்களை தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு அழைத்திருந்தாரே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை அதுபற்றிய அவரது நிலைப்பாடு, அதற்கான தீர்வு என்ன என்ற எந்த விடயத்தையும் அவர் தொட்டுச் செல்லாதது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது.

சிலர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். சிலர் அதுபற்றி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்கின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இல்லை என்பது தான் உண்மை.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசத் தயாராக இருப்பதாகவும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனாலும் அவர் எந்தவொரு தமிழ்க் கட்சியினதும் தலைவர்களையும் கண்டு கொள்ளாமலேயே இருக்கின்றார். பதவியேற்ற பின்னர் அவருக்கு நிர்வாக ரீதியான அழுத்தங்கள் சுமைகள் இருக்கின்றன. இராஜதந்திர சந்திப்புகள் இருக்கின்றன. அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமனம் செய்வதிலும் சிக்கல்கள் இருந்தன.

இவற்றுக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளை சந்திப்பதற்கோ, அவர்களுடன் பேசுவது பற்றி யோசிப்பதற்கோ அவருக்கு நேரமில்லாமல் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் நேரமின்மையினால் மாத்திரம் இதுவரை சந்திப்புகள் நடக்கவில்லை என்று கருதுவது முட்டாள்தனம். உண்மையைச் சொல்லப் போனால் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசத் தயாராக இல்லை.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த போது அவருக்கு முன்பாக இருந்த பிரதான சிக்கல் இனப்பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட போர் ஆகியன தான்.

இனப்பிரச்சினையைத் தீர்த்தால் போர் தானாக முடிவிற்கு வரும் வாய்ப்பும் அவருக்கு முன்பாக இருந்தது.

ஆனால் அவர் அந்த வாய்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. போரை முடிவிற்கு கொண்டு வந்தால் இனப்பிரச்சினை தானாக தீர்ந்து விடும் என்று அவர் நம்பினார்.

எனவே தான் போரை நடத்துவதற்கான பொறுப்பை தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்சவிடம் கொடுத்தார்.

பாதுகாப்புச் செயலாளராக போருக்குத் தலைமை வகித்திருந்த அவரும் திட்டமிட்டபடி புலிகள் இயக்கத்தை அழித்து போரை முடிவிற்கு கொண்டு வந்தார்.

போர் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தானாகவே அமுங்கிப் போய்விடும் என்றே நம்பினார். அதனால் தான் பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்துவிட்டது என்று பிரகடனம் செய்தார்.

அந்த நம்பிக்கையினால் தான் அவர் அதற்கு சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தயாராக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை அவர் ஒருபோதும் கூறியதில்லை. 13 பிளஸ் பற்றி அவர் வாக்குறுதிகளை கொடுத்திருந்தாலும் அதனைக் கூட அவர் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருக்கவில்லை.

ஒரு பக்கத்தில் அபிவிருத்தி மாயைக்குள் தமிழர்களை இழுத்துச் சென்று படிப்படியாக அவர்களின் அரசியல் அபிலாஷைகளை அழித்து விடலாம் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி மாயைக்குள் தமிழர்களின் உரிமைக்கான போராட்டமோ அதற்கான கோஷங்களோ அடங்கிப் போய்விடவில்லை.

இவ்வாறான நிலையில் 2015 ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றியது. மஹிந்த ராஜபக்ச தர முடியாது என்று கூறி ஏமாற்றினார்.

ஆனால் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருவரும் ஒரு பதவிக்காலத்தை முடித்து விட்டார்கள்.

இப்போது கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது போரை ஆரம்பித்திருக்கிறார். இந்தமுறையும் அதற்கான வாய்ப்பைக் கொடுத்திருப்பது மஹிந்த ராஜபக்ச தான். முதலில் அவர் பாதுகாப்புச் செயலாளராக போரை முன்னெடுத்தார். இப்போது ஜனாதிபதியாக அவர் வேறொரு போரை முன்னெடுக்கிறார்.

கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக இப்போது இனப்பிரச்சினையை தீர்த்து நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் ஒரு தெரிவும் இருக்கிறது. அதற்கு மாற்றான தெரிவுகளும் அவர் முன் இருக்கின்றன.

ஆனால் அவர், இனப்பிரச்சினை என்ற விடயத்தையே கையில் எடுத்துக் கொள்ளத் தயாரில்லை. மஹிந்த ராஜபக்ச எவ்வாறு இனப்பிரச்சினையைக்கான தீர்வை தூக்கியெறிந்து விட்டு போரின் மூலம் பிரச்சினையை தீர்க்க முனைந்தாரோ அதேவழியில் தான் கோட்டாபய ராஜபக்சவும் நடக்கிறார்.

இவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் வழிகளைத் தேடிக் கொள்ளாமல் அபிவிருத்தி என்ற போரை முன்னெடுத்து எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்று கருதுகிறார். எல்லா பிரச்சினைகளுக்கும் தன்னிடம் உள்ள ஒரே தீர்வு வளர்ச்சி அல்லது அபிவிருத்தி தான் என்று அவர், இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோகலேயிடம் கூறியிருக்கிறார்.

தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசி மக்களை முட்டாளாக்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர் நல்ல கல்வி, சிறந்த வாழ்க்கைத்தரம், நல்லதொரு வேலை, கௌரவமான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் சமமான வாய்ப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துவதன் மூலமும் தாம் அந்த இலக்கை எட்டப் போவதாக கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினை இதுவல்ல. அவர்களின் கல்வி, சம உரிமை, கௌரவமான வாழ்க்கை, சிறந்த வேலை என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும், அவர்கள் தமது அரசியில் உரிமைகளைப் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை முக்கியமாக கொண்டிருக்கின்றார்கள்.

தமது நிலத்தின் மீதான உரிமையை அவர்கள் உறுதிப்படுத்த நினைக்கிறார்கள். தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதிலிருந்து அவர்களைதிசை திருப்பி கொண்டு செல்வதற்கான யுக்திகளைப் பற்றியே கோட்டாபய ராஜபக்ச பேசிக்கொண்டிருக்கிறார்.

2009இற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களை அபிவிருத்தியின் பெயரால் மடக்கிப் போடலாம் என்று எதிர்பார்த்தோ, அதேபோலவே கோட்டாபய ராஜபக்சவும் சம உரிமை, சம வாய்ப்பு, கௌரவமான வாழ்வு, கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு என்ற புதியதொரு மாயையை உருவாக்க முனைகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இனப்பிரச்சினை அதற்கான தீர்வு பற்றிய தெளிவான சிந்தனை எதுவும் கிடையாது என்று அவருடன் நடத்திய சந்திப்பின் மூலம் உணர்ந்து கொண்டதாகவும், எனவே அவர் மூலம் தீர்வு கிட்டும் என்று தாம் நம்பவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கிறார்.

இந்திய ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலும் சரி, அதற்கு முன்னர் வெளிப்படுத்திய கருத்துக்களிலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மிக கவனமாக தவிர்த்துக் கொண்டு வரும் கோட்டாபய ராஜபக்ச, இதனை வேறொரு போராகத் தான் கருதுகிறார்.

மஹிந்த ராஜபக்ச எவ்வாறு போரின் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முயன்றாரோ அதுபோலவே கோட்டாபய ராஜபக்சவும் இன்னொரு விதமான போரின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்று எதிர்பாக்கிறார்.

இது எப்படி சாத்தியமாகப் போகிறது என்பது அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் நிச்சயமான புலிகள் இயக்கத்தை போரில் அழித்தது போன்ற யுத்தம் அல்ல என்பதை அவர் விரைவிலேயே புரிந்து கொள்வார்.