ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரும் ஊடக அமைப்புக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன விடுத்த கோரிக்கை தொடர்பாக கலந்துரையாட தேசிய பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் கூடியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் கடந்த நவம்பர் 23ஆம் திகதிக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பத்திரிகை ஒன்றின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை உட்பட ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்த விசாரணகைள் ஷானி அபேசேகரவின் ஆலோசனை மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் நடந்து வருவதாக உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இரண்டு விசாரணைகள் முடிவடைந்து, விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளார்

இப்படியான பொலிஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வது அடுத்த கட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால், அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்து முன்னர் இருந்த பதவியில் நியமிக்குமாறும் சங்கம் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை இது சம்பந்தமாக சுதந்திர ஊடக அமைப்பு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இந்த இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய வேண்டும் எனக் சுதந்திர ஊடக அமைப்பு கூறியுள்ளது.

இதனிடையே இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் கடந்த 22ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அரசியல் காரணங்களுக்காக ஷானி அபேசேகர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இப்படியான குறுகிய நோக்கத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும் இளம் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.