இலங்கை தமிழர்களை பற்றி பேச மோடி யார்? பேராசிரியர் நளின் டி சில்வா கேள்வி

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் தமிழர்களை பற்றி பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி யார் என சிங்கள தேசியவாதியும் தேசிய சிந்தனை அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியர் நளின் டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சிந்தனை அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில் நளின் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அக்கட்டுரையில் மேலும்,

மோடி தனது ஏகாதிபத்தியத்தை எம்மீது சுமத்த முயற்சிக்கின்றார். கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவான உடன், இந்தியா தனது வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. இந்தியா சென்ற கோட்டாபாய ராஜபக்சவை வரவேற்க சிரேஷ்ட அமைச்சரை அனுப்பவில்லை. டெல்லியில் சாதாரண இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மோடி இந்து தேசியவாதி. இந்தியாவுக்கு தெற்கில் பௌத்த நாடு இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியடைய மாட்டார். பாகிஸ்தானுக்கு எதிராகவே காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் என்ற பௌத்த பிராந்தியத்திதை ஏற்படுத்தினாரே அன்றி இந்திய பௌத்தர்களுக்கு ஆதரவாக அல்ல. இலங்கையின் சில படித்த பௌத்தர்களுக்கு அது பௌத்த ராஜ்ஜியத்தை உருவாக்கியதை போன்றது.

இந்தியா, புலிகள் தோற்கடிக்கப்படுவதை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியின் கொலையே இதற்கு காரணம். எனினும், இந்தியா தற்போதும் தமிழ் இனவாதிகளை பாதுகாக்கின்றது. இந்தியா புலிகளை மட்டுமே எதிர்க்கின்றது.

மோடி, டெல்லியில் தனது அருகில் கோட்டாபயவை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார். என்ன நியாயம்?. நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் பற்றி பேச மோடி யார்?, மோடி இலங்கை தமிழ் பேசும் மக்கள் பற்றி கூறியதை கோட்டாபய கவனத்தில் கொள்ளவில்லை. இது பற்றி பேச மோடிக்கு உரிமையில்லை.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், ஜே.ஆர். ஜெயவர்தன இந்தியாவுக்கு பணிந்து கொண்டு வந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம். 30 ஆண்டுகள் கடந்தும் இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால், ஏற்பட்ட நன்மை என்ன என்ற கேள்வியை எழுப்ப நேரிடும். தற்போது மாகாண சபைகள் இயங்கவில்லை. இதனால், நாட்டுக்கு இலாபமே அன்றி நஷ்டம் ஏற்படவில்லை.

30 ஆண்டுகளுக்கு பின்னர் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்ட மூலத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குறிப்பாக இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களுடன் மாகாண சபைகளின் அதிகாரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மாகாண சபைகள் என்பது மாநிலங்களை விட சிறிய அமைப்பு. இந்தியா, தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தேவையில்லை.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன என்பதை மோடியால் கூற முடியுமா?. இலங்கை சிறிய நாடு, பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான கலாசாரத்தை கொண்ட நாடு. இதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறக்கக் கூடாது. நாம் முதலில் தேராவாத பௌத்த நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்தி, தொடர்புகளை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.