19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல! வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

சில குறைப்பாடுகள் இருந்தாலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு ஏற்றது அல்ல என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகத்திடம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

ஜனாதிபதி ஆட்சி முறையில் இருந்து நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையாகும். அதன் ஒரு நடவடிக்கையாகவே 19ஆவது திருத்தச் சட்டம் உள்ளது.

இந்த திருத்தச் சட்டம் காரணமாக சிரமங்கள், தடைகள் ஏற்படக்கூடும். எனினும், ஜனாதிபதி ஆட்சி முறையில் இருந்து நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு செல்வதே அடிப்படையான கொள்கை நோக்கம். நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நாடாளுமன்றத்திற்கு பெற்றுக்கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவின் நிலைப்பாடு என்ன என்பது எனக்கு தெரியாது. அவரது நிலைப்பாட்டையும் எங்களது நிலைப்பாட்டை ஒன்றாக இணைக்க முடியும். இவற்றை நாம் பேச வேண்டும்.

அடுத்த பொதுத் தேர்தலில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் முதலில் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். இது அனைத்தையும் மிகவும் அவசியமானது. இந்த தேர்தல் முறையில் பொதுமக்களின் உண்மையான ஜனநாயக உரிமை முற்றிலும் இல்லாமல் போயுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.