மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுடைய அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுடைய அரசாங்கமொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானதரன மாநாயக்க தேரரை இன்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியின் சின்னம் என்ன என்பது குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பொதுத் தேர்தலில் வலுவான அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது இலக்காக இருக்க வேண்டும்.

எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர்கள் என்ற வகையில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதனையே விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் கட்சி சின்னம் என்பதனை விடவும் எதிர்கால திட்டங்கள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்கால திட்டங்களை அமுல்படுத்துவதற்கு நாம் தேர்தலில் நிச்சயமாக வெற்றியீட்ட வேண்டும். எந்தவொரு சின்னத்திற்கும் நாம் தயார்.

கடந்த காலங்களில் டைனோசர், கடிகாரம், மோட்டார் சைக்கிள் போன்ற சின்னங்களில் கூட பொதுஜன முன்னணி சில தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தது.

மொட்டு கட்சிக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பலரும் தற்பொழுது ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து தெளிவடைந்துள்ளனர்.

எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டால் யாரிடமும் கை ஏந்தாமல் எம்மால் ஆட்சி நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.