கன்சர்வேட்டிவ் கட்சியின் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டுமென்ற யோசனை!

Report Print Steephen Steephen in அரசியல்

இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் இந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டது. இலங்கையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வாக இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட முனைப்புகளை மேற்கொண்டுள்ள சர்வதேச தலையீட்டாளர்களுக்கு தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்றவற்றில் பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இரண்டு அரசுகளுக்கான தீர்வை வழங்க தமது ஒத்துழைப்பு கிடைக்கும் என அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தமிழீழத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழீழம் அல்லது வேறு பெயர்களில் தமிழ் நாடுகள் இருந்ததில்லை. இதனால், அப்படியான நாட்டுக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இல்லை. வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளை பலவந்தமாக இணைத்தே ஐக்கிய ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னர் இருந்தது போல் அந்நாடுகளை பிரிக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் குரல் கொடுத்ததில்லை.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட 8 தினங்கள் கடந்துள்ள போதிலும் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இது சம்பந்தமாக எதனையும் தெரிவிக்கவில்லை. பிரிவினைவாதிகளின் தேவைக்கு அமைய தெரிந்தும் தெரியாதவர்கள் போல இருக்கின்றார். இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட முடியாது என்றால், குறைந்தது இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அது பற்றி தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக உடனடியாக பதிலளிக்குமாறு நாங்கள் வெளிவிவகார அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.