மாற்றங்களுக்கு ரணிலிடம் சாதகமான பதில் கிடைத்துள்ளது! இம்ரான் எம்.பி

Report Print Mubarak in அரசியல்

மக்கள் கேட்கும் மாற்றங்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

தேசிய கட்சிகளில் சிறுபான்மை பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தல் எமக்கு உணர்த்தியுள்ளது. நான் எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த காலம் முதல் இந்த கருத்தையே அனைத்து இடங்களிலும் வலியுறுத்தி வந்தேன்.

அதுபோலவே நான் தனியே முஹம்மதுக்கும், அப்துல்லாவுக்கும் சேவைகள் செய்யவில்லை. வெருகலில் உள்ள ராஜாவுக்கும் பதவிசிறிபுரவில் உள்ள பண்டாரவுக்கும் நான் சேவைகள் செய்துள்ளேன். இதனாலேயே இன்று என்னுடன் மூவின மக்களும் கைகோர்த்துள்ளனர்.

தற்போது சஜித் பிரேமதாசவை எதிர்கட்சி தலைவராகவும் கட்சியின் தலைவராகவும் நியமிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. கட்சியில் மக்கள் எதிர்பார்த்துள்ள இந்த மாற்றங்களுக்கு தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.

எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமாராக்கும் நோக்காக கொண்டு மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களும் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பின் மூலம் இடம்பெறும்.

இப்போது சஜித் பிரேமதாசவின் தோல்வியை கண்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அனுதாப அலையொன்று உருவாகியுள்ளது.

அத்துடன் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது. இதை பயன்படுத்தி நாம் ஒரே கட்சியாக ஒற்றுமையுடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் எம்மால் அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியும் என தெரிவித்தார்.

Latest Offers