சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நாளில், குறித்த பெண் பணியாளர், தூதரகத்திற்கு அருகில் இருந்து வாடகை கார் ஒன்றின் மூலம் பம்பலப்பிட்டிக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்தும், அங்கிருந்து மீண்டும் வாடகை கார் மூலம் மாளிகாகந்தை பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் பல விபரங்கள் தொழில்நுட்பம் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சட்டமும், நீதிதுறையும் தனது கடைமையை சரியாக செய்யும்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தனது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.