பொறுப்பு கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம்! எம.ஏ.சுமந்திரன்

Report Print Murali Murali in அரசியல்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்கு எமது அழுத்தங்களை முழுமையாக நாம் பிரயோகிப்போம் என அவர் வலிறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம். ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம்.

இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், எழுந்துள்ள புதிய சூழ்நிலை சம்பந்தமாக இப்போது பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கம் தீர்மானங்களை எதிர்க்கவில்லை. சில ஆரோக்கியமான நகர்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர். பொறுப்புக் கூறல் விடயத்தை தவிர்த்து செயற்பட முடியாது.

பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனை தட்டி கழிக்கவே முடியாது.

இந்த புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளபடுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம்.

அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணை மூடி செயற்படுவதாக அர்த்தமில்லை. இந்த விடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களையும் முழுமையாக நாம் பிரயோகிப்போம்” என கூறியுள்ளார்.

Latest Offers