இராணுவ ஆட்சிக்கான அடித்தளம் உருவாகி வருகிறது - துஷார இந்துனில்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு இணையான கடுமையான நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை அடித்தளத்தை உருவாக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச கட்டமைப்பில் உள்ள பிரதான பதவிகளுக்கு சிவில் சேவையில் ஈடுபட்டுள்ள துறைசார்ந்த நிபுணர்களுக்கு பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளதன் மூலம் இது தெளிவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரச பொறிமுறைக்குள், அரச கட்டமைப்புக்குள் பல பெரிய மாற்றங்களை செய்து வருகின்றனர். பிரதான பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையே நாங்கள் காணும் பிரதான மாற்றமாகும். துறைசார்ந்த சிவில் சேவையின் நிபுணர்கள், விசேட இயலுமை உள்ளவர்களை ஒதுக்கி விட்டு, இராணுவமயமான மனநிலை கொண்ட இராணுவ பிரதானிகளே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தொகையான இராணுவ தலைவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, தாம் விரும்பும் இராணுவ பயங்கரவாதம் நோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்ற விடயம் குறித்து கவனம் செலுத்த தயார் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.