சஜித்திற்கு எதிராக பொதுஜன முன்னணியினர் பாவித்த ஆயுதம்!

Report Print Murali Murali in அரசியல்

மில்லேனியம் சவால் ஒப்பந்தமானது சஜித்திற்கு எதிராக பொதுஜன முன்னணியினர் பாவிக்கப்பட்ட ஆயுதமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சஜித் பிரேமதாஸ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பேசப்பட்ட விடயங்களில் பிரதானமான ஒன்றுதான் அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தமாகும்.

மில்லேனியம் சவால் ஒப்பந்தமானது சஜித்திற்கு எதிராக பொதுஜன முன்னணியினர் பாவிக்கப்பட்ட ஆயுதமாகும். அமெரிக்க அரசாங்கத்திற்கு இலங்கையை காட்டிக்கொடுக்கப் போவதாக சொன்னார்கள்.

அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்காமல், இந்த நாட்டில் எத்தனை பேர் ஏமாற்றமடைந்தார்கள். அரசியல் பேச்சுக்களுக்கு செவிகொடுத்து சஜித் பிரேமதாஸவுக்கு எத்தனைபேர் வாக்களித்தார்கள்.

ஆனால் இப்போது அந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த எதிர்த்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன கூறுகிறார்கள்?

விசேடமாக உதய கம்மன்பில, மில்லேனியம் சவால் ஒப்பந்தமானது 70 சதவீதம் மிகவும் நல்ல ஒப்பந்தம் என்றும், 30 சதவீதமே அதில் குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்ததை அவதானித்தேன்.

போக்குவரத்து மற்றும் வீதிக்கட்டமைப்பை விருத்தி செய்யும் திட்டம் சிறந்தது என்றும் காணி அளவீடுகளில்தான் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எந்த ஒப்பந்தமானாலும் அதிலுள்ள குறைகளை பேச்சு நடத்தி தீர்த்து அமுல்படுத்துவது தானே நாட்டிற்கு சிறந்தது.

இந்த அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக மக்களை நம்பவைத்து கடுமையான விமர்சனத்தினால் விளித்த எதிரணியினர் இப்போது அதனை எப்படி செய்யப்போகிறார்கள்?

அவர்கள் வெளியிட்ட கருத்துக்களினால் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பலர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக வாக்களித்தனர், சிலர் உண்ணாவிரதம் செய்தனர், தூதரகங்களுக்கும் கடிதங்களை எழுதினார்கள்.

அவ்வாறு செய்தவர்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள்? விசேடமாக எதிரணியினர் மேற்கொண்ட பிரசாரங்களை நம்பி சஜித்திற்கு எதிராக வாக்களித்த மக்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கேட்க விரும்புகின்றேன்.

மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக கூறியவர்கள் அதனை இப்போது செய்யமுயற்சிப்பதை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள வேண்டும்.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையான விடயங்களை தடுப்பதற்கே எதிரணியினர் போராடினார்கள். எதிர்காலத்தில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகின்றோம்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் என்ற குறுகிய காலமே இருக்கின்ற நிலையில் ஏமாற்றமடைந்தது போதும் என்று எண்ணி மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...