சுவிஸ் தூதரக பெண் கடத்தபட்ட விவகாரம்? அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலைவரத்தை சர்வதேசத்திற்கு முன்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டமை மற்றும் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

எனினும் இந்த சம்பவத்தை சரளமாக பார்க்கக்கூடாது. உண்மையான தகவல்களை அறிவதற்கு மக்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதேபோல சர்வதேச மட்டத்தில் எமது நாட்டின் மீதும் பங்கம் ஏற்படுத்தும் சம்பவமாகும்.

சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் என்பது மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் சமாதானத்திற்காக முன்நிற்கின்ற நாடாகும்.

அவர்கள் எந்த நாட்டிற்கும் கீழ்பணியவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கும் சுவிஸ் அரசாங்கம் கடமைபட்டிருக்கவில்லை. சுயாதீன நாடாகும்.

ஆகவே சர்வதேச தொடர்புகளை பேணிப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆகவே இந்த சம்பவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த சம்பவத்தை யார் செய்தார்கள்? யார் திட்டமிட்டார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள காத்திருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது கட்சியின் ஏனைய அங்கத்தவர்களுக்கோ பங்காளிகள் மீதோ குற்றஞ்சாட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. அதனூடாக சர்வதேசத்திடம் இருந்து எமது நாடு மீது கண்டிப்பும், குற்றச்சாட்டுமே ஏற்படும்.

அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன்.

இந்த சம்பவம் உண்மையா பொய்யா? நாடகமா என்பதை அரசாங்கம் சுயாதீனமாக செயற்பட்டால்தான் கண்டறியலாம்.

சர்வதேச விம்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த சம்பவத்தின் உண்மை நிலைவரத்தை மக்களுக்கும் உலகிற்கும் கூறவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.