ஐக்கிய தேசியக் கட்சி, பொது தேர்தலில் புதிய முகங்களை அறிமுகப்படுத்தும்! ரணில் விக்ரமசிங்க

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் பொது தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் இரண்டாம் தலைமுறை தலைவர்களை உருவாக்கியுள்ளோம். இந்நிலையில், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய முகங்களை அறிமுகப்படுத்தும்.

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாம் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொண்டால், பொதுத் தேர்தலில் மொத்தம் 105 ஆசனங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி மொத்தமாக 105 இடங்களைப் பெற்றுக்கொண்டால், அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான 19வது திருத்தத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், தேர்தல் பிரசாரத்தை திறம்பட கையாண்டால், 113 ஆசனங்களுடன், நாம் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில், நாம் பெரும்பான்மை சமூகத்தை ஈர்க்க வேண்டும். இளம் வாக்காளர்களையும் ஈர்க்க வேண்டும்” என ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...