அரசியல் கைதிகள் தொடர்பான ஞானசார தேரரின் சிந்தனை வரவேற்கத்தக்கது!

Report Print Thirumal Thirumal in அரசியல்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளை அரசியல் ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டு விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.

ஆனால் அந்த கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

மேலும், அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கதக்க விடயமாகும். இந்த சிந்தனை அனைத்து தெற்கு சமூகத்தினரிடமும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இது ஒட்டு மொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும். இதனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கண்கொண்டு பார்க்க கூடாது என்பது தான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.

இப்போது ஓரளவுக்கு ஞானசார தேரர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் அதனை ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் நாங்கள் கூறுவது ஆணைக்குழுக்கள் நியமிப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எந்த அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்.

அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ய வேண்டும்.

ஆணைக்குழுக்களை அமைப்பது காலத்தை இழுத்தடிக்கின்ற செயல். இந்த பயங்கரவாத தடை சட்டத்தை வைத்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ஒரு சாத்தியமற்ற செயல்.

எனவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகள் அணைவரையும், அரசியல் தீர்மானத்தின் ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஞானசார தேரர் மற்றும் அவரை சார்ந்த அமைப்பினர் அதுபோன்று தெற்கின் சிங்கள சமூகம் முன்வைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.