இலங்கையர்களின் இந்திய குடியுரிமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Malar in அரசியல்

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றில் விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என வினவியிருந்தார்.

இதற்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளிக்கையில்,

இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டப்பிரிவின் 5ஆம் மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

அந்தவகையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் இன்று இந்திய மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஸா முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நேற்று முதல் தொடர்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்திய குடியுரிமை பிரச்சினையில் தலையிட ஐ.நா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த விடயத்தில் எதிர்க் கட்சிகளின் செயற்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார்.

Latest Offers

loading...