எம்.சீ.சீ. உடன்படிக்கை எப்படி நாட்டுக்கு உகந்ததாக மாறியது? ஐ.தே.கட்சி கேள்வி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும், நாடு அமெரிக்காவின் காலனியாக மாறும் எனக் கூறிய, எம்.சீ.சீ உடன்படிக்கை திடீரென எப்படி நாட்டுக்கு உகந்ததாக மாறியது என்பதை விமல் வீரவங்ச , உதய கம்மன்பில் உள்ளிட்டோர் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எம்.சீ.சீ. உடன்படிக்கையால் நாடு இரண்டாக பிளவுப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்த போது கூக்குரல் இட்டது.

நாட்டுக்கு எதிரான எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்திட போவதில்லை என அவர்கள் தொடர்ந்தும் கூறி வந்தனர். அப்படியான உடன்படிக்கைகள் இருக்குமாயின் அவற்றை இரத்துச் செய்வோம் எனவும் கூறினார்கள்.

எனினும், எம்.சீ.சீ. உடன்படிக்கை என்பது பிசாசோ, புலியோ அல்ல, இதனால் நாட்டுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்று இந்த அரசியல்வாதிகள் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்களிடம் கூறுவதே இங்குள்ள நகைப்புக்குரிய விடயம்.

எம்.சீ.சீ. உடனடிக்கை திடீரென சிறந்ததாக எப்படி மாறியது என்பதை நாட்டுக்கு தெளிவுப்படுத்துமாறு நாங்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகியோரிடம் கேட்கின்றோம்.

இலங்கை வரைப்படத்தை வரைந்து, நாட்டை பிரிக்க போகிறார்கள், வேலிகளை அமைக்க போகிறார்கள், விசா எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கூறியவர்கள் தற்போது உடன்படிக்கை சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர் என்பதை நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers