கோட்டாபய மற்றும் மகிந்தவை வீழ்த்துவதற்கு சதி! எச்சரித்துள்ள தேரர்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய உட்பட ராஜபக்ச குடும்பத்தை வீழ்த்துவதற்கும், நாட்டை அழிக்கவும் முயற்சி செய்கின்ற சில சக்திகள் ஒருசில மகாநாயக்க தேரர்களையும் விலைகொடுத்து வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாரஹேன்பிட்டி எலன் மெத்தினியாராமய விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் நெருக்கமாக சேர்ந்துகொண்ட ஒருசில நபர்கள் குறித்து எச்சரிககையாக இருக்கும்படியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு இன்றைய தினம் தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற போயா தின சிறப்பு வழிபாடு நிகழ்வுகளில் கலந்துகொண்ட உடுவே தம்மாலோக்க தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எமது நாட்டை அழிவுக்கு உட்படுத்தும் மிகப்பெரிய சக்தியொன்று செயற்பட்டு வருகின்றது. அதனை புதிதாக பிரதமருக்கு எடுத்துக்கூறத் தேவையில்லை. நாட்டை அழிக்கின்ற இந்த மிகப்பெரிய சக்தியின் முதலாவது இலக்குதான், ராஜபக்ச குடும்பத்தினரை அழிப்பதாகும்.

நீங்கள் அனைவரும் நாடு மீதும் பௌத்த சாசனம் மீதும் அளப்பரிய நெருக்கம் இருக்கிறது என்கிற எண்ணம் அந்த சக்திகளுக்கு உள்ளதே அதன் காரணமாகும். ஆரம்பத்திலிருந்தே உங்கள் பக்கமாக உதவிக்கு ஆதரவுக்கு நின்றவர்களை சற்று கவனியுங்கள்.

நீங்கள் பிரதமர், கோட்டாபய ராஜபக்ச இப்போது ஜனாதிபதி. அதனை மாற்றமுடியாது. ஆனாலும் இவ்விருவரிடையே நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். அண்மையில் இணைந்த, சந்தர்ப்பத்தில் உங்களிடம் இணைந்தவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

உதவி செய்யாதவர்களை சேர்த்துக் கொள்ளாமல், உதவி செய்தவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பிக்குமார்கள் கூறுவதன் பின்னணியில், பௌத்த தேரர்கள் அவர்களை நெருங்கி உதவி பெறுவதற்காக இருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம்.

அப்படி சிந்தனையில் நான் அதனைக் கூறவில்லை. உதவி செய்யாத நபர்கள் நெருங்குவதன் அபாயமான நிலைமை ஒன்று உள்ளது. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தில் வீழ்த்துவதற்கான தாக்குதலை நடத்திவிடுவார்கள்.

2010ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒருமாதமே இருந்த நிலையில் ஜனாதிபதிக்கும், நாமல் ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச, கோட்டாபயவையும், பசில் ராஜபக்சவையும் அப்போது நெருங்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எனினும் அவ்வாறு நெருக்கமாக இருந்தவர்கள்தான் இறுதியில் அனைத்தையும் அழித்துப்போட்டார்கள். அதனால் இம்முறை கடந்த காலங்களாக நெருக்கமாக இல்லாதவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

அப்படிப்பட்ட நபர்கள் சிலர் நெருக்கமாக செயற்பட சூழ்ச்சி செய்துவருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. உதவி செய்யாமல் தூர நின்றவர்கள் சிலர் குழுவாக உங்களுடன் இணைந்து பணியாற்றலாம், சிறப்பாக செயற்படலாம் ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வீழ்த்தப் பார்ப்பார்கள்.

நாட்டை அழிப்பதற்கு முயற்சித்துவருகின்ற அடிப்படைவாத சக்திகள், அதற்கான முதற்கட்டமாக ஒருசில மகாநாயக்க தேரர்களையும், பௌத்த தேரர்களையும் விலைக்கு வாங்கியிருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...