கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரை கைது செய்ய முயற்சி..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத் தரப்பு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் 3 நாட்களாக, 19 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில், இது ஒரு நாடகம் என்றும், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தூதரக அதிகாரி கடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்று அரசாங்கத்திலுள்ள பலர் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே, விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், குறித்த அதிகாரியை பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக சிறையில் அடைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

சுவிஸ் தூதரக அதிகாரி தான் கடத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியிருந்தால், குற்றவியல் சட்டத்தின் கீழ், அவருக்கு 2 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று சட்டவாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டவாளர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவதற்கு யாராவது உதவி செய்திருந்தால், அவர்களும் தண்டிக்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

“குற்ற விசாரணைத் திணைக்களத்தில் அறிக்கை அளிக்கும்போது, தனது தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட வேறு பெயரை அவர் பயன்படுத்தியிருந்தால், அது ஒரு குற்றமாகும்.

எந்தவொரு குடிமகனும், தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயர்களைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த முடியாது.

இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணைத் திணைக்களம் அவரிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது, அவர் கூறிய தககவல்கள் தவறானது என்று தெரியவந்தால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மீது குற்ற விசாரணைத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும்.” என்றும் சட்டவாளர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.