கருணாவாக நான் இன்னும் போராட்டத்தில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..? அவரே கூறும் விடயங்கள்

Report Print Varunan in அரசியல்

யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது. அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை. ஏனெனில் கருணா போராட்டத்தில் இன்னும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

அம்பாறை, பொத்துவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம்.

மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம் ஓடும் கப்பலிலே பயணிக்க வேண்டும் என மேடைகளில் உரக்கக் கூறினோம். அது பற்றிய தெளிவு அப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விடயம். நாம் வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசிடம் வாதிடும் சக்தியாக மாறமுடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களை காடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ் தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்கு புரியவில்லை.

இது ஒரு வரலாற்றுப் பிழை இந்த வரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும் நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகளில் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துரோகச் செயல்.

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், காளி கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன் என்று திமிராகப் பேசிய முஸ்லிம் தலைவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக்காலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு. அவரை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் தமிழ் மக்கள். அவர் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை மாறாக துரோகத்தை மாத்திரமே செய்தார் அவரால் ஒரு அரசியல் கைதிகள் கூட வெளியில் விட முடியவில்லை.

இன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறார்.

நான் ஏன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் என்றால், எனக்கு தெரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நாள் உடையும். ஏனெனில் அது ஒரு ஆணித்தரமான கட்சி அல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல, அவர்கள் பதிவு செய்யப் போவதுமில்லை. தமிழரசு கட்சியின் கீழ் தான் ஒன்றாக இருக்கின்றனர்.

அவர்களின் உடைவை நிமிர்த்த கூடிய கட்சி தேவை என்பதால்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கி தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் பயணம் செய்து கட்சியை பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் நாம் களம் இறங்குவோமானால் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாது.

ஏனெனில் தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள். தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும் இதனால் அந்த ஆசனம் சென்றடையும் இது ஒரு ஜனநாயக மரபு.

அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியும்.

வெல்ல வைத்து தருவது உங்கள் கடமை நீங்கள் வெல்ல வைப்பவரை நான் அமைச்சராக்குவேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியின் தேவையை விட அம்பாறை மாவட்டத்திற்கு மிக முக்கியமானது.

இந்த பொத்துவில் மண்ணானது கஸ்ட்ரோ, டேவிட், தோமஸ், ரஞ்சன் போன்ற பல தளபதிகளை இந்த போராட்டத்திற்காக தந்தது. ரஞ்சன் என்ற மாவீரரும் நானும் ஒரே காலத்தில் பயிற்சியை பெற்றவர்கள்.

இந்த யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை ஏனெனில் கருணா போராட்டத்தில் இன்றும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள்.

அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள் இது எல்லோருக்கும் இழப்புதான் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.