சிங்களவர்கள் அனுபவிக்கும் அரசியல் உரிமையை தமிழர்களுக்கும் தரவேண்டும் என்பதே எமது கோரிக்கை

Report Print Rusath in அரசியல்

தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வருகின்ற 18ஆம் திகதி 70ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் காலத்தில் இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் அநியாயமாக தமிழ் இளைஞர்கள் அயுதமேந்தி இறந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு - வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வருகின்ற 18ஆம் திகதி 70ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

எனவே தந்தை செல்வாவின் காலத்தில் இப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வுகண்டிருந்தால் அநியாயமாக தமிழ் இளைஞர்கள் அயுதமேந்தி இறந்திருக்கமாட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் மக்கள் இறந்திருக்கமாட்டார்கள். இவை அனைத்திற்கும் முழு பொறுப்பும் இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

எனவே இன்றுவரை தமிழ் மக்கள் ஒரு ஏமாற்றப்பட்ட இனமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தற்போது இலங்கையில் புதிய ஜனாதிபதி வந்துள்ளார். மூன்று இன மக்களையும் ஒரே பார்வையில் தான் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

எனவே சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினை சென்று கொண்டிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள், தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்புகள் தான் காரணமாகும்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும், சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற அரசில் உரிமையை தமிழ் மக்களுக்கும் தர வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகும்.

இதை தான் தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிகளிலும் பிரதிபலித்துச் சொல்கின்றார்கள். எந்தவொரு சிங்கள தலைவரை பற்றியும், தமிழ் மக்களுக்கு குரோதங்கள் இல்லை.

மாறாக 70 வருடங்களாக இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கை தான் தொடர்கின்றன. இதனை தற்கால இளைஞர்கள் நன்கு அறிந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.