ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக எதிர்வரும் 2023ம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியின் தலைவர் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நியமிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்பட வேண்டும் என கட்சியின் செயற்குழுக் அவரது பெயரை முன்மொழிய அதனை அந்தக் கட்சியின் மகா சம்மேளனத்தின் போது கட்சியினர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் கடந்த அக்டொபர் மாதம் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட பொது சம்மேளனத்தின் போது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
எனவே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினால் மாத்திரமே இன்னொருவரை நியமிக்க முடியும்.
அது தவிர எவரதும் விருப்பதிற்கு கட்சியின் தலைவரை மாற்ற முடியாது எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயாசூரியாவுக்கு சம தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே போட்டியிடவுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தேர்தலை அடுத்தும் 2023ம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.