நல்லூர் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Report Print Sumi in அரசியல்

நல்லூர் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.

அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான வாசுகி குறுகிய நேரத்தில் திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தரப்பட்டுள்ளமையினால் தன்னால் வாசித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை என்ற புரளியை சபையில் ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து சபையின் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மதுசுதன் கருத்துத் தெரிவிக்கையில்,

சபையின் நிதிக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான வாசுகிக்கு வரவு செலவுத் திட்டத்தை வாசித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அரசியல் பேதம் பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள் என கருத்துரைத்தார்.

பின்னர் வரவு செலவுத் திட்டம் தவிசாளரினால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து எதிராக வாக்களித்தனர். எனினும், சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக 6 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி சார்பாக 4 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக 5 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தலா ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு சார்பாக இருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நல்லூர் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றபோது வரவு செலவுத் திட்டம் இரு வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. அந்தவகையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும், 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

மேலும் சபையினை ஆட்சி செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்திருக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் திருத்தங்களுடன் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Latest Offers

loading...