அதிகார பகிர்வினை வழங்க முடியாதென கூறும் அரசாங்கம்! யாழில் வைத்து மனம் திறந்தார் சுமந்திரன்

Report Print Sujitha Sri in அரசியல்

அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டமை சரியென்பதை தெளிவாக்குகின்றனது.

அவருக்கு ஆதரவு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் முகத்தை எங்கே வைத்துக் கொள்ள போகிறார்கள். இனியும் அமைச்சரவையில் இருப்பதா என்பதனை அவர் யோசிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியே அவர்களின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை அத்துடன், அவரது தம்பி ஜனாதிபதியான நிலையில் அதிகார பகிர்வினை வழங்க முடியாது என கூறியுள்ளார்.

பெரும்பான்மையினர் ஏற்காத எதனையும் செய்ய முடியாது என சொல்கின்றார். நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் அதனால் பெரும்பான்மையினருக்கே நன்மையாகும்.

அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசினை ஆதரிப்போருக்கும் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers