சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

Report Print Sumi in அரசியல்

சட்டவிரோத மணல் அகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடின், ஆளுநர் அலுவலகத்தை முடக்குவோம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

மணல்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிபத்திரங்கள் தேவையில்லை என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாரிய மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கனிய வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக, பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.

அனுமதிபத்திரங்கள் கொடுக்கப்பட்ட வேளையிலும், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் மணலின் விலை அதிகரித்தும் காணப்பட்டது.

அமைச்சரவையில் அனுமதிப்பத்திரங்கள் தேவை இல்லை என சொன்னவுடன், தமிழர் தாயகத்தில் மிகப் பாரிய அளவில் மணல் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. சுற்றுப் புறச்சூழலை கருத்திற் கொள்ளாது, மணல் கொள்ளையர்கள் மணலை கொள்ளையடிக்கின்றார்கள்.

ஏன் அரசாங்கம் தமது அடியாட்களுக்கு மணல் கொள்ளையடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார்களா என்ற கேள்வி எழுகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும், இங்கு பாதிக்கப்படுவது எமது மக்கள். புதிய ஒழுங்கு விதிகளுக்கு கீழ் இராணுவத்தினரை தேவையான அளவிற்கு ஈடுபடுத்துவதற்கான விசேட விதிகளை ஆக்கியுள்ளீர்கள்.

இராணுவமும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றதா அல்லது துணை போகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

வடமாகாணத்தில் ஆளுநர் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை இல்லாத போதிலும், வடமாகாணம் கேட்பார் இன்றியும், பார்ப்பார் இன்றியும் விடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...