வவுணதீவுப் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

Report Print Kumar in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 21வது அமர்வு இன்று முற்பகல் சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவின் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்தியின் மீது அக்கறைகொண்ட அனைத்து உறுப்பினர்களும் இதற்கு தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் தவிசாளர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான பல்வேறு வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்காத நிலையில் வரவு செலவுத் திட்டத்திற்கு அதரவாக 12 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமுக சோசலிசக் கட்சி (சுயேற்சைக் குழு) என்பன ஆதரவாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

ஏற்கனவே 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது முதற்தடவையாக தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேளை 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...