தமிழீழ விடுதலை இயக்கத்தில் எந்த பிளவும் ஏற்படவில்லை! கோவிந்தன் கருணாகரம்

Report Print Kumar in அரசியல்

தமிழீழ விடுதலை இயக்கத்தில் எந்த பிளவும் ஏற்படவில்லையெனவும், அக்கட்சி அவ்வாறே உள்ளதாகவும் கட்சியில் இருந்து பத்து பேரே வெளியேறி சென்றுள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ளக்கூடிய பலமும் சக்தியும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு உள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகி சிறிகாந்தா , சிவாஜிலிங்கம் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாக அறிகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு உருவாகிய காலம் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கட்சிகளாகவும் தனி நபர்களாகவும் வெளியேறியுள்ளவர்கள் பத்து கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கட்சியும் ஒன்றாகும்.

சிவாஜிலிங்கம் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டதன் காரணமாக அவர் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் அடிப்படை உரிமை மற்றும் சகல பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம் செயலாளர் நாயகமாக இருந்த சிறிகாந்தா ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக இறுதியாக நடைபெற்ற கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் பங்குபற்றியிருந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் சஜித் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போது சிறிக்காந்தா உட்பட நான்கு பேர் அதற்கு எதிரான இருந்தார்கள்.

இருந்தாலும் பெரும்பான்மை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் சிறிகாந்தா அதற்கு எதிரான தீர்மானங்களை எடுத்தார்.

அதன் காரணமாக தலைமைக்குழு அவரை பதவியில் இருந்து இடை நிறுத்தி ஒரு வாரகாலத்திற்குள் விளக்கம் கோரியிருந்தது.எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாது தான் தனி கட்சி தொடங்கப்போவதாக பத்திரிகைகளில் அறிவித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...